விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நிச்சயம் நடைபெறும்: அண்ணாமலை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நிச்சயம் நடைபெறும்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்
அண்ணாமலை (கோப்புப் படம்)
அண்ணாமலை (கோப்புப் படம்)

பாவூர்சத்திரம்: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நிச்சயம் நடைபெறும் என பாவூர்சத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பா.ஜ. ஊழியர் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநிலத்தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட பா.ஜ.க. ஊழியர் கூட்டம் பாவூர்சத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாநில பா.ஜ.க.தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசியது:

தென்காசி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் அதிகளவு வெற்றி பெற்று, 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இருக்க வேண்டும். மக்கள் நமக்கு ஓட்டு போட தயாராக இருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் வாக்காளர்களை தக்க வைத்து கொண்டு வருகின்றனர். பா.ஜ.க. வளர்ந்து கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சித்தேர்தல் வரை உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும்.

மற்ற கட்சிகளுக்கு நிரந்தர தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள் 20, 30 ஆண்டுகளாக இருப்பர். பா.ஜ.கவில் மட்டும் தான் சுழற்சி முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புது புது தலைவர்கள் உருவாகி, அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருப்பர். அடுத்த 4 மாதங்கள் ஒட்டு மொத்தமாக வேலை செய்து கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை கொண்டு வந்து, அவர்களை வாக்காளர்களாக மாற்றி உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

2014 இல் 283 எம்.பி.களுடனும், 2019இல் 303 எம்.பி.க்களுடனும் வெற்றி பெற்றோம். 2021இல் 400க்கும் குறைவில்லாமல் வெற்றி பெறுவோம். அப்போது  தமிழகத்தில் இருந்து 20க்கும் குறைவில்லாமல் எம்.பி.க்களை அனுப்ப வேண்டும். அதில் தென்காசி முதலிடமாக இருக்க வேண்டும்.

10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக எந்த வேலையும் செய்யாமல் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து விட்டது. கரோனா முதல் மற்றும் 2-வது அலையில் பா.ஜ.கவினர் தான் பணி செய்தனர். ஒவ்வொரு தேர்தலுக்கு 24 சதவீதம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அவர்களில் இளைஞர்கள் பெரும்பலானோர் பாஜகவை நோக்கி வர ஆரம்பித்து விட்டனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது. வீட்டில் வைத்து விநாயகரை கும்பிட அனுமதி கொடுக்க நீங்கள் யார்? நமது சித்தாந்தத்தை, தமிழக மண்ணின் பராம்பரியத்தை புரிந்து கொள்ளாமல் திமுகவினர் ஆட்சியில் இருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நிச்சயம் நடக்கும். அதில் மாற்று கருத்து கிடையாது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கும் நீங்கள் எதற்காக டாஸ்மார்கை நடத்துகிறீர்கள். குழந்தைகளை எங்களை நம்பி பள்ளிக்கு அனுப்புங்கள், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அமைச்சர் சொல்கிறார். அரசை நம்பி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்.

எல்லா இடத்தில் கரோனா குறைந்து விட்டது என்று கூறும் நீங்கள், எதற்காக விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் கரோனா குறையவில்லை என கூறுகிறீர்கள். 

விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால் புண்ணியம் மட்டும் அல்ல, பீடை வராது என்பது ஐதீகம். திமுக அரசு விநாயகரை கையில் எடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்தால். அந்த விநாயகர் திமுக ஆட்சிக்கு முடிவு எழுதுவார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, நிர்வாகிகள் அருள்செல்வன், சோலையப்பன், அன்புராஜ், பாண்டித்துரை, தீனதயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து அண்ணாமலை, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com