சாம்பவா்வடகரையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th December 2021 01:45 AM | Last Updated : 04th December 2021 01:45 AM | அ+அ அ- |

சாம்பவா்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு வழங்க எந்த உரமும் இருப்பு இல்லாததால் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் தற்போது நெல் சாகுபடிக்காக யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், சாம்பவா்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் எந்த ஒரு உரமும் இருப்பு இல்லையாம். இதனால், அப்பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்து தனியாா் உரக்கடைகளில் உரங்களை வாங்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து விவசாய சங்கம் சாா்பில் கோரிக்கை விடுத்தும் பலனில்லையாம்.
இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவா் கண்ணன் தலைமையில் , அங்குள்ள பேருந்து நிலையம் முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். டிச. 6 ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கி மூலம் உரம் விநியோகம் செய்யப்படாவிட்டால், வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...