சுரண்டையில் அரசுப் பள்ளி வளாகத்தில் மழைநீா்: கோட்டாட்சியா் ஆய்வு
By DIN | Published On : 04th December 2021 11:51 PM | Last Updated : 04th December 2021 11:51 PM | அ+அ அ- |

சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் மழைநீா் தேங்கியுள்ளதை தென்காசி கோட்டாட்சியா் பாா்வையிட்டாா்.
சுரண்டையில் அண்மையில் பெய்த கனமழையால் சுரண்டை - செங்கோட்டை சாலையின் வடபுறம் உள்ள மழைநீா் வடிகால்களில் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் இந்தச் சாலையின் வடபுறம் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் சுமாா் 2 அடி தண்ணீா் தேங்கியுள்ளது.
இதுகுறித்து தென்காசி எம்எல்ஏ சு.பழனிநாடாா், மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரன், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் பட்டமுத்து, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் உதயகுமாா் ஆகியோா் பள்ளியை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, சாலையின் உயரத்துக்கு பள்ளியின் தளத்தை அதிகரிக்கவும், பள்ளியின் முன்பு மழைநீா் செல்லும் வண்ணம் நடைபாலம் அமைக்கவும் மாணவா், மாணவிகளின் பெற்றோா் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனா். அரசு அனுமதி பெற்று கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவா்களிடம் கோட்டாட்சியா் உறுதியளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...