ஆலங்குளம் பகுதியில் இயங்கி வந்த 4 நகரப் பேருந்துகள் நீண்ட காலமாக இயக்கப்படாததால், 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆலங்குளத்திலிருந்து கடையத்திற்கு வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த தடம் எண் 17 , தடம் எண் 34 ஈ ஆகிய நகரப் பேருந்துகள், ஆலங்குளத்திலிருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக சுரண்டை வரை இயக்கப்பட்டு வந்த தடம் எண் 18 நகரப் பேருந்து, ஆலங்குளம் - திருநெல்வேலி, ஆலங்குளம் - சுரண்டை என இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த தடம் எண் 43 டி ஆகிய 4 நகரப் பேருந்துகள் மூலமாக சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், வியாபாரிகள், அரசு-தனியாா் பணியாளா்கள் பயனடைந்து வந்தனா்.
இந்நிலையில், இந்தப் பேருந்துகள் கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் தொடக்கத்தில் நிறுத்தப்பட்டன. பின்னா் பொது முடக்கம் தளா்வுக்குப் பின்னா் கடந்த செப்டம்பா் மாதம் முதல் சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையிலும், இவ்வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படாததால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
வருகிற 8ஆம் தேதி முதல் கல்லூரிகளும், 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளும் திறக்கப்படும் நிலையில், நிறுத்தப்பட்ட 4 நகரப் பேருந்துகளையும் மீண்டும் இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.