வருவாய்த்துறை அலுவலா்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
By DIN | Published On : 18th February 2021 12:47 AM | Last Updated : 18th February 2021 12:47 AM | அ+அ அ- |

தென்காசியில் நடைபெற்ற வருவாய்த் துறை அலுவலா் சங்க ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவு காவலா், மசால்சி, பதிவுரு எழுத்தா் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும், பேரிடா் மேலாண்மை மற்றும் நோ்முக உதவியாளா்(தோ்தல்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும், கருணை அடிப்படையில் நியமனதாரா்களின் பணியை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் திருமலைமுருகன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட இணைச் செயலா் சீனிவாசன், தா்மராஜ், சீனிப்பாண்டி, பட்டமுத்து, வெங்கடேஷ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். மாடசாமி வரவேற்றாா். ஹரிகரன் நன்றி கூறினாா்.