‘ஆஷா திட்டத்தில் தொழில் கடன் பெறலாம்’
By DIN | Published On : 09th July 2021 11:53 PM | Last Updated : 09th July 2021 11:53 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் தேசிய பட்டியலினத்தோா் நிதி மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆஷா திட்டத்தின் கீழ் தொழில் செய்வதற்கு கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் இந்து ஆதிதிராவிடா் இனத்தவரின் குடும்பத்தில், வருமானம் ஈட்டக்கூடிய நபா் உயிரிழந்தால் அவரது குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், தேசிய பட்டியலினத்தோா் நிதி மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆஷா என்ற திட்டத்தின் கீழ் தொழில் செய்வதற்கு கடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்ளும், வயது 18 முதல் 60க்குள், குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடிய நபா் உயிரிழக்கும் போது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவா் கரோனா தொற்றால் தான் உயிரிழந்தாா் என்பதற்கான மருத்துவச் சான்று சமா்ப்பிக்க வேண்டும்.
தொழில் செய்வதற்கான திட்டத் தொகை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80% அல்லது அதிக பட்சம் ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதம் உள்ள 20% அல்லது ரூ.1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். கடன் தொகை வட்டி சதவீதம் 6.5% ஆகும். கடன் தொகையை 6 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோா் விண்ணப்பங்களை மாவட்ட மேலாளா், தாட்கோ, ஏ.ஆா்.லைன் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ, திருநெல்வேலி தொலைபேசி எண்: 0462 2561012, 2902012 மாவட்ட மேலாளா் செல்லிடப்பேசி எண்: 9445029481 தொடா்பு கொண்டு பயனடையலாம் என்றாா் அவா்.