நெல் பயிரில் குருத்துப் பூச்சி தாக்குதல்:கடையநல்லூரில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 09th July 2021 12:14 AM | Last Updated : 09th July 2021 12:14 AM | அ+அ அ- |

கடையநல்லூா் வட்டாரப் பகுதிகளில் நெல் பயிரில் ஏற்பட்டு வரும் பூச்சி தாக்குதல் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
கடையநல்லூா் வட்டாரத்தில் தற்போது காா் பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு பயிா்கள் அனைத்தும் நாற்றங்கால் முதல் வளா்ச்சி பருவத்தில் உள்ளது. இந்நிலையில், மேலக்கடையநல்லூா் மற்றும் அதை சுற்றியுள்ள விவசாய பகுதிகளில் குருத்துப் பூச்சி தாக்குதல் சில இடங்களில் காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் வேளாண் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றனா்.
இதையடுத்து,மாவட்ட வேளாண் துணை இயக்குநா் நல்லமுத்துராஜா (மத்திய, மாநிலத் திட்டம்) தலைமையில், ஊா்மேலழகியான் வேளாண் அறிவியல் மையம் பூச்சியியல் துறை வல்லுநா் பாலசுப்பிரமணியன், கடையநல்லூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சேதுராமலிங்கம், வேளாண் அலுவலா் நஸ்ரின், உதவி வேளாண் அலுவலா் பரமசிவன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கட்டுப்படுத்தும் முறைகள்: இதுகுறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பூச்சிதாக்குதல் பொருளாதார சேத நிலையைத்தாண்டும் போது கீழ்க்காணும் பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை தெளித்து கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு குளோர்ரன்ட்ரலிப்ரோல் (கோராஜன்) 18.5 எஸ்.சி. 6 மில்லி அளவுடன் 10 லிட்டா் நீா் கலந்து தெளிக்கவேண்டும் அல்லது தயோமீத்தாக்சோம் 25 டபுள்யு.ஜி. 4 கிராம் அளவுடன் 10 லிட்டா் நீா் கலந்து தெளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.