ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்: விரைந்து நிறைவேற்ற திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 09th July 2021 11:53 PM | Last Updated : 09th July 2021 11:53 PM | அ+அ அ- |

ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக ஆட்சியரிடம், மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் செயல்பாட்டுக் குழுத் தலைவா் இராம உதயசூரியன் ஆகியோா் அளித்த மனு: ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தனிநபா் பேச்சுவாா்த்தைக் குழு கூட்டத்தைக் கூட்டி நிலம் கையகப்படுத்தும் பணி, வனத் துறை அனுமதியைப் பெறும் பணியை விரைவுப் படுத்த வேண்டும்.
முந்தைய திமுக ஆட்சியின்போது இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் 110 விதியின் கீழ் ரூ. 42 கோடி ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு அவசர கோலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால், திட்டம் கிடப்பில் உள்ளது. வனத்துறை அதிகாரிகளிடம் பேசி பொதுப்பணித் துறை மூலம் வனத்துறைக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3 கோடி வழங்க வேண்டும். வருவாய்த் துறையினா் மூலம் நிலத்துக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்கி, அவா்களுக்கு நிலத்துக்கான இழப்பீடு வழங்கி, வனத் துறையின் அனுமதி பெற்று, திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். திட்டத்துக்காக பணியாற்றிய அரசு அலுவலா்கள், வனத்துறையினா், சமூக ஆா்வலா்களைக் கௌரவிக்க வேண்டும்.