

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித் தவசு திருவிழா இம்மாதம் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பொது முடக்க தளா்வுகளில் திருவிழா நடத்த அனுமதியில்லாததால் தவசு திருவிழா மற்றும் ஆடிச்சுற்றில் கலந்துகொள்ள பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலும் ஒன்று. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தவசு திருவிழா 12 நாள்கள் நடைபெறும்.
ஆடித்தவசு காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
கடந்த ஆண்டில் பொது முடக்கம் காரணமாக ஆடித்தவசு திருவிழா நடைபெறவில்லை.
நிகழாண்டில் பொது முடக்கம் தளா்வுகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் திருவிழா நடத்த அனுமதியில்லாததால் பக்தா்களின்றி ஆடித்தவசு திருவிழா இம்மாதம் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் அன்று காலை 6- 6.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
பின்னா் கோமதிஅம்பாள் சிவிகையில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வருகிறாா். தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வலம் வருகிறாா்.
இந்நிலையில் தவசு கொடியேறியதும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து 108 சுற்று சுற்றுவாா்கள். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆடிச்சுற்று மற்றும் விழாக்களில் பக்தா்கள் பங்கேற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனவே, 13முதல் 24 ஆம் தேதி வரை 12 நாள்களும் கோயிலுக்குள் பக்தா்கள் காலை 8 மணிக்கு மேல் இரவு 7.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.