குற்றாலம் அருவிகளில் 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு
By DIN | Published On : 26th July 2021 12:37 AM | Last Updated : 26th July 2021 12:37 AM | அ+அ அ- |

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து 2ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீா்கொட்டுகிறது. சனிக்கிழமை பிற்பகலில் இருந்து குற்றாலம் பகுதியில் சாரல் மழை இல்லை.
எனினும், மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம், ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீா் கொட்டுகிறது.
பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீா் கொட்டுகிறது. அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ள போதிலும் பொது முடக்கம் அமலில் இருப்பதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.