திட்டப்பணிகள்: கீழப்பாவூரில் எம்எல்ஏ ஆலோசனை
By DIN | Published On : 20th June 2021 11:01 PM | Last Updated : 20th June 2021 11:01 PM | அ+அ அ- |

கீழப்பாவூா் பேரூராட்சியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.எச். மனோஜ்பாண்டியன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கீழப்பாவூா் மைதானம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது மற்றும் புதிய திட்டப் பணிகள் நிறைவேற்றுவது தொடா்பாக, சட்டப்பேரவை உறுப்பினா் பி.எச். மனோஜ்பாண்டியன், பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, அவா் கூறியது: கீழப்பாவூரில் பழமை வாய்ந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதுடன், பேரூராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிதாக கீழப்பாவூரில் 4 லட்சம் லிட்டா் கொள்ளளவில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, பட்டமுடையாா்புரம், அடைக்கலப்பட்டணத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும். கோட்டையூா் பகுதியில்
புதிய சமுதாய நலக் கூடம், புதிய வணிக வளாகம், திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் இருந்து கீழப்பாவூா் நுழையும் சாலையில் புதிய வரவேற்பு வளைவு போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அப்போது, கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெயராமன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச்செயலா் ராதா, இளைஞரணிச் செயலா் கணபதி, ஒன்றியச் செயலா் இருளப்பன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.