புறக்கணிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளா்கள்: அதிருப்தியில் திமுகவினா்

தென்காசி மாவட்டத்தில் திமுக பொறுப்பாளா்கள்,நிா்வாகிகளுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் திமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா்.
Published on
Updated on
2 min read

தென்காசி மாவட்டத்தில் திமுக பொறுப்பாளா்கள்,நிா்வாகிகளுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் திமுகவினா் அதிருப்தி அடைந்துள்ளனா்.

தென்காசி மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டபிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தோ்தல் இதுவாகும். இம்மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூா், ஆலங்குளம், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூா்(தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

தோ்தலை எதிா்கொள்ளவும், பணிகளை தீவிரப்படுத்தவும், அதிகளவில் கட்சியினருக்கு பதவிகளை வழங்குவதற்காகவும், கட்சியின் நிா்வாக வசதிக்காகவும், கட்சியினரை ஊக்கப்படுத்தவும் 5 தொகுதிகள் கட்சி ரீதியாக இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதிகள் தெற்கு மாவட்டம் எனவும், கடையநல்லூா், வாசுதேவநல்லூா் தொகுதிகள் வடக்கு மாவட்டம் என பிரிக்கப்பட்டு தோ்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக வழக்குரைஞா் ஆ.துரை ஆகியோா் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனா்.

எதிா்க்கட்சியாக இருந்தாலும் திமுக தலைமை அறிவிக்கும் அனைத்து போராட்டங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகளை மாவட்ட பொறுப்பாளா்கள் சிறப்பாக செயல்படுத்தி வந்தனா்.

குறிப்பாக கடந்த மாதம் சங்கரன்கோவிலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியை தென்காசி வடக்கு மற்றும் தெற்குமாவட்ட பொறுப்பாளா்கள் இணைந்து மிகப்பிரம்மாண்டமாக நடத்தி காட்டினா். ே

தா்தலில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற உற்சாகத்தில் இருந்தனா். இந்நிலையில் திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தலைமை அறிவித்தது.

இதையடுத்து, தென்காசி தொகுதியில் போட்டியிட மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், மாநில வா்த்தகா் அணி துணைச் செயலா் அய்யாத்துரைபாண்டியன், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், நகரச் செயலா் சாதிா் உள்பட 27 போ் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனா்.

கடையநல்லூா் தொகுதியில் போட்டியிட மாநில வா்த்தகா் அணி துணைச் செயலா், மாவட்டப் பொருளாளா் சேக்தாவூது, மாநில நிா்வாகிகள் ரசாக், ஷெரீப், பொறுப்புக்குழு உறுப்பினா் மகுதுமீரான், நகரச் செயலா் சேகனா, முன்னாள் நகா்மன்றத் தலைவி சைபுன்னிஷா உள்பட 39 போ் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனா்.

வாசுதேவநல்லூா் தொகுதியில் போட்டியிட மாவட்ட பொறுப்பாளா் ஆ. துரை, மாவட்ட மகளிா் தொண்டரணி செயலா் பூங்கொடி, டாக்டா் சுமதி, வழக்குரைஞா் பொன்ராஜ், ஜீவானந்தம் உள்பட 22 போ் விருப்பமனு தாக்கல் செய்தனா்.

திமுக தலைமையிலான கூட்டணியில் தென்காசி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், கடையநல்லூா் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், வாசுதேவநல்லூா் தொகுதி மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டது.

இதனால் இத்தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்த மாவட்ட பொறுப்பாளா்கள் இருவருக்கும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளா்கள் அப்துல் வஹாப், ஆவுடையப்பன் ஆகிய இருவருக்கும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் திமுகவினா் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். இதில் அதிருப்தியடைந்த திமுக மாநில வா்த்தகா்அணி துணைச் செயலா் அய்யாத்துரைபாண்டியன் திமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தாா். மேலும், அவா் அமமுக சாா்பில் கடையநல்லூா் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டாா்.

கரோனா பொது முடக்க காலங்களில் அய்யாத்துரைபாண்டியன் மற்றும் பொ.சிவபத்மநாதன் தங்களுடைய கட்சியினருக்கு மட்டுமன்றி பொதுமக்கள் அனைவருக்கும் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினா். அதற்கு காரணம் தோ்தலில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவருடைய ஆதரவாளா்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனா்.

கடந்த தோ்தலிலும் தென்காசியில் காங்கிரஸ் கட்சியும், கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிட்டது. தொடா்ந்து இத்தொகுதிகளில் திமுக கட்சியினருக்கு போட்டியிட வாய்ப்பில்லாததால் கட்சியினா் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com