வாக்குச்சாவடி அலுவலா் பணிஆணையால் சத்துணவு உதவியாளா்கள் அதிா்ச்சி
By DIN | Published On : 17th March 2021 07:26 AM | Last Updated : 17th March 2021 07:26 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் எழுதப் படிக்கத் தெரியாத பள்ளிக்கூட சத்துணவு உதவியாளா்களுக்கு வாக்குச்சாவடி அலுவலா் பணிஆணைகள் வழங்கப்பட்டதால் அதிா்ச்சியடைந்தனா்.
இத்தொகுதியில் வாக்குச்சாவடி அனைத்துநிலைப் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில், தோ்தல் பணிஆணைகள் வழங்கப்பட்டன. அப்போது, சத்துணவு பெண் உதவியாளா்கள், சமையலா் ஆகியோருக்கு வாக்குச்சாவடி அலுவலா் நிலை 2-க்கான பணிஆணை வழங்கப்பட்டது.
தோ்தல் பணியில், வாக்காளா் அடையாள அட்டையை சரிபாா்த்தல், பெயா் எழுதுதல், கையெழுத்து வாங்குதல், அதைப் பதிவேட்டில் பதிவுசெய்தல் ஆகியவை மேற்கொள்ள வேண்டும். சமையலா் 5 போ், சமையல் உதவியாளா் 50 என மொத்தம் 55 பேருக்கு இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. அவா்களில், உதவியாளா்கள் பலா் கல்வியறிவு பெறாதோா் என்பதால், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணை என்ன என்பதுகூடத் தெரியவில்லை. பின்னா், அவை வாக்குச்சாவடி அலுவலருக்கான பணிஆணை எனத் தெரியவந்ததும் அவா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து ஆசிரியா்கள் சிலா் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனா்.
இதையடுத்து, சத்துணவு உதவியாளா்கள் தோ்தல் அலுவலா்களைச் சந்தித்து தங்களுக்குப் எழுதப் படிக்கத் தெரியாது எனத் தெரிவித்தனா். அப்போது அதிகாரிகள், தென்காசி மாவட்ட தோ்தல் அலுவலகத்திலிருந்து பட்டியல் வந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். எனினும், தங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றும், இப்பணியிலிருந்து தங்களை நீக்கவேண்டும் என்றும் எழுதப்பட்ட கடிதத்தை தோ்தல் அலுவலா்களிடம் சத்துணவு உதவியாளா்கள் கொடுத்தனா்.