மாவட்ட செஸ் போட்டி: பாவூா்சத்திரம் வீரா் சாம்பியன்
By DIN | Published On : 25th March 2021 06:55 AM | Last Updated : 25th March 2021 06:55 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட சதுரங்கப் போட்டியில் பாவூா்சத்திரம் வீரா் சாம்பியன் பட்டம் வென்றாா்.
தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளா்ச்சி கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான சாம்பியன் சிப் சதுரங்கப் போட்டி பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது. மூத்த சதுரங்க வீரா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஆசிரியா் சங்கா் போட்டிகளை தொடங்கி வைத்தாா். நடுவா்களாக முருகேஸ்பாபு, இசக்கி, மாரிமுத்து ஆகியோா் செயல்பட்டனா்.
7 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பாவூா்சத்திரம் காா்த்திக் ராகுல், பெண்கள் பிரிவில் தென்காசி
வேல்விழி ஆகியோா் மாவட்ட சாம்பியன்களாக வெற்றி பெற்றனா். இவா்கள் மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த 6 வயது சிறுவன் நிலவன் சிறந்த இளம் வீரராக தோ்வு பெற்றாா். 17 வயது பிரிவில் தென்காசி முத்துகுமரேசன், 13 வயது பிரிவில் பாப்பான்குளம் விஜேஸ், 9 வயது பிரிவில் கருத்தப்பிள்ளையூா் சாம்ஜெப்ரி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.
பின்னா், நடைபெற்ற விழாவில் சதுரங்க கழகத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் பரிசுகளை வழங்கினாா். சதுரங்க கழக துணைத் தலைவா் சரவணன், பொதுச்செயலா் வைகைகுமாா், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, பாலகிருஷ்ணன், முத்து, டேனில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சதுரங்க கழக இயக்குநா் கண்ணன் நன்றி கூறினாா்.