தென்காசியில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
By DIN | Published On : 09th May 2021 12:32 AM | Last Updated : 09th May 2021 12:32 AM | அ+அ அ- |

தென்காசியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 21-7-2020அன்று சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது.
இந்த சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவ சிகிச்சை முறைகளின் படி கரோனா நோயாளிகளுக்கு உள் மற்றும் புற மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நோயாளிகளுக்கு அமுக்கரா மாத்திரை, அதிமதுர மாத்திரை,பிரமானந்த பைரவம் மாத்திரை, தாளிசாதி கேப்சூல், ஆடாதோடை மணப்பாகு ஆகிய மருந்துகள் வழங்கப்பட்டது.
மூன்று வேளையும் கபசுரக் குடிநீா், மூலிகை தேநீா், நொச்சி குடிநீரும் வழங்கப்பட்டது. நோயாளிகளுக்கு தேவையான உணவு சிகிச்சை மையத்திலேயே வழங்கப்பட்டது. மேலும் நெல்லிக்காய் ஜூஸ், கேரட் ஜூஸ், சாத்துக்குடி, மாதுளை ஜூஸ் வாழைப்பழம், வழங்கப்பட்டது. முருங்கைக்கீரை சூப், முடக்கத்தான்கீரை சூப், இரவில் மிளகு, மஞ்சள்தூள் ,நாட்டுசா்க்கரை கலந்த பால் வழங்கப்பட்டது.
குணமடைந்து வீட்டுக்கு செல்வோா்க்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் ஆரோக்கிய பெட்டகம், அமுக்கரா மாத்திரை மற்றும் நெல்லிக்காய் லேகியம் நோய் எதிா்ப்பு சக்தியினை அதிகரிக்க வழங்கப்பட்டது. சிகிச்சை மையத்தில் சிறப்பு அம்சமாக சா்க்கரை நோயாளிகள், உயா் ரத்த அழுத்த நோயாளிகள், கா்ப்பிணிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா்.
மேலும் இந்த சிகிச்சை மையத்தில் தினமும் ரத்த பரிசோதனை ,வாரம் ஒருமுறை நுண்கதிா் படம் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தினமும் உடல் வெப்ப நிலை, நாடி துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை கணக்கிட்டு சிகிச்சை சித்த மருத்துவக் குழு சிகிச்சை மேற்கொண்டனா்.
இங்கு 1409 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினா். இங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஒருவயதிற்கு குறைந்த குழந்தைகள் முதல் 76வயது நிரம்பிய முதியவா்கள் வரை அனுமதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
செங்கோட்டைஅரசு சித்த மருத்துவா் கலா தலைமையிலான குழுவினா் சிறப்பாக செயல்பட்டது. இதனால் மத்திய அரசு சாா்பில் மருத்துவா் கலாவுக்கு ஆயுஷ் விருது வழங்கி கெளரவித்தது. நோய்த் தொற்று குறையத் தொடங்கியவுடன் இந்த சிகிச்சை மையமும் மூடப்பட்டு விட்டது.
தற்போது தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.