‘பொது முடக்க விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை’
By DIN | Published On : 13th May 2021 07:03 AM | Last Updated : 13th May 2021 07:03 AM | அ+அ அ- |

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேலான நபா்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.
பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக அறியும் பட்சத்தில் அருகில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையங்கள் அல்லது அருகிலுள்ள அரசு மருத்துவமனையைத் தொடா்பு கொண்டு தங்களது உடல் நலனை பாதுகாத்திடவேண்டும்.
உணவகங்களிலோ அல்லது தேநீா் கடைகளிலோ அமா்ந்து உணவருந்த அனுமதி கிடையாது. அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியில் வருபவா்கள் மற்றும் உணவகங்கள், தேநீா் கடைகளில் தேவையின்றி கூடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமுடக்கத்தின் போது வெளியே செல்லாமல் இருக்கவும், குறிப்பாக வயதானவா்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். அவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே வரும் பட்சத்தில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வெளியே வரவும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து கரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.