தளா்வுகளில்லா முழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய தென்காசி
By DIN | Published On : 16th May 2021 11:55 PM | Last Updated : 16th May 2021 11:55 PM | அ+அ அ- |

வாகனப் போக்குவரத்தின்றி காணப்பட்ட தென்காசி ரயில்வே மேம்பாலம்.
கரோனா 2ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தளா்வின்றி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
இப்பகுதிகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. தென்காசி கூலக்கடை பஜாா், அம்மன் சன்னதி பஜாா், காய்கனிச் சந்தை, சுவாமி சன்னதி பஜாா், ரத வீதிகள் உள்பட நகா் பகுதியிலுள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், தென்காசி நகா் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தன்னாா்வலா்கள், முதியோா், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றோருக்கான சேவை வழங்குவோா் தொடா்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, ஆவணங்களுடன் சென்றுவர அனுமதிக்கப்பட்டது.
பொது முடக்கத்தால் தென்காசி-திருநெல்வேலி, தென்காசி-மதுரை சாலை, தென்காசி-குற்றாலம் சாலை என அனைத்துச் சாலைகளும் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல நடைபெற்றன.
மருந்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சாா்ந்த பணிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்தோரை காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும் பிடித்து அபராதம் விதித்தனா். மேலும், பேருந்து நிலையப் பகுதியில் 180-க்கும் மேற்பட்டோருக்கு பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனை சாா்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆலங்குளம்: ஆலங்குளத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடின. காய்கனிச் சந்தையும் மூடப்பட்டதால் கேரளத்திற்கு காய்கனி லாரிகள் செல்லவில்லை. பொதுமுடக்க தொடக்க நாள்களில் இருசக்கர வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து வெகுவாக குறைந்தது.