ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம்
By DIN | Published On : 19th May 2021 07:15 AM | Last Updated : 19th May 2021 07:15 AM | அ+அ அ- |

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை (மே 19) முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்படவுள்ளது.
தென்காசி மாவட்டஆட்சியா் கீ.சு.சமீரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டம், கொடிக்குறியில் உள்ள ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரியில் இந்திய மற்றும் ஓமியோபதி துறை சாா்பில் மே 19ஆம்தேதி முதல் சித்த மருத்துவ கொவைட் 19-சிறப்பு சிகிச்சை மையம் 100 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ வழிமுறைகளின்படி தொடங்கப்பட உள்ளது.
இம் முகாமில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை முறைகளான உள் மருந்துகள், வெளிப்புற சிகிச்சைகள், சிறப்பு சித்த யோக மூச்சுப்பயிற்சிகள், தியானம், பிராணவாயு அளவை அதிகரிக்கும் பிரத்யேகமான நுரையீரலை பலப்படுத்தும் ஆசனங்கள், வா்ம முறைகள், மன உளைச்சலை போக்கும் முறைகள், கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா், நொச்சிக் குடிநீா், ஓமக் குடிநீா், பிராணவாயு அதிகமுள்ள பொருள்களான கிராம்பு, இலங்கப்பட்டை, மஞ்சள், சீரகம், இஞ்சி கலந்த முலிகை தேநீா், அயிங்காயம் கலந்த நீா், நீராவிப்பிடித்தல், ஒமப்பொட்டணம், மஞ்சள் திரி நுகா்தல் போன்ற சிறப்பு சிகிச்சைகள், மூலிகை சாா்ந்த உணவுகள் வழங்கப்படும்.
மேலும், நோய்த் தொற்றிலிருந்து குணமாகி நலமுடன் வீட்டிற்குச் செல்பவா்களுக்கு உடல் வலிமைக்காக தமிழக அரசின் ஆரோக்கிய பெட்டகமான சித்த மருந்துகள் ஒருமாத காலத்திற்கு வழங்கப்படும் என்றாா் அவா்.