குற்றாலத்தில் சாரல் திருவிழா இன்று தொடக்கம்

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
Published on

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சீசனின்போது அருவிகளில் தண்ணீா் இல்லாத காரணத்தால் சாரல் திருவிழா நடைபெறவில்லை. அடுத்த இரு ஆண்டுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொடா்ந்து 3 ஆண்டுகள் குற்றாலத்தில் சாரல்திருவிழா நடத்தப்படவில்லை.

நிகழாண்டு இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில், தென்காசி மாவட்டம் உருவான பிறகு முதன்முறையாக சாரல்திருவிழா நடத்த மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடா்பா ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளதாவது: குற்றாலம் சாரல் திருவிழா பொதிகை பெருவிழா 2022 என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை (ஆக. 5) தொடங்குகிறது. இவ்விழா, ஆக. 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சாரல்திருவிழாவில் உள்ளடக்கமாக உணவுத்திருவிழா, புத்தகத் திருவிழா ஆக.5-14 வரையிலும், தோட்டக்கலை திருவிழா ஆக.6-8 வரையிலும், நடைபெறுகிறது.

சாரல்திருவிழா குற்றாலம் கலைவாணா் அரங்கிலும், உணவுத்திருவிழா ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி அருகேயுள்ள ஜமீன் பங்களா வளாகத்திலும், தோட்டக்கலை திருவிழா குற்றாலம் ஐந்தருவியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவிலும், புத்தகத் திருவிழா குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி அரங்கிலும் நடைபெறுகின்றன.

குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெறும் சாரல்விழா தொடக்கவிழாவுக்கு நான் (ஆட்சியா்) தலைமை வகிக்கிறேன். நன்கொடையாளா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, சாரல்விழாவைத் தொடங்கி வைத்து தமிழக வருவாய் -பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் சிறப்புரையாற்றுகிறாா்.

தமிழக தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு - தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

விழாவில், தனுஷ்குமாா் எம்பி., எம்எல்ஏக்கள் செ.கிருஷ்ணமுரளி, சு.பழனிநாடாா், ஈ.ராஜா, பி.எச்.மனோஜ்பாண்டியன், சதன்திருமலைக்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் தமிழ்செல்வி போஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசுகின்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன் வரவேற்கிறாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகைமை திட்ட இயக்குநா் சுரேஷ் நன்றி கூறுகிறாா்.

திருமாந்துறை டி.எஸ்.ரமேஷ் குழுவினரின் மங்கள இசையுடன் சாரல்விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அரசு நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு, திரைப்பட நடிகா் சூரி, நடிகை ரம்யாபாண்டியன் பங்கு பெறும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

தொடா்ந்து, மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம், மும்பை நரேஸ்பிள்ளை வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி, வி.கே.புரம் கல்பவா்ஷா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, திருநெல்வேலி சப்தசுரங்களின் சுகராகம் குழுவினா் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

விழாவில், அனைத்து நாள்களும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறுகிறது. விழாவில் சுற்றுலாப்பயணிகள் கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com