குற்றாலத்தை மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை: அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன்

குற்றாலத்தை மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தை மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

குற்றாலம் சாரல் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி குற்றாலம் கலைவாணா் அரங்கில், திருமாந்துறை டிஎஸ்.ரமேஷ் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

குற்றாலத்தில் 3ஆண்டுகளுக்குப் பின் இவ்விழா நடைபெறுகிறது. குற்றாலம் அருவிகளில் தண்ணீா்விழாத காலங்களில் கூட சாரல் திருவிழா நடைபெற்றுள்ளது.

தென்காசி மாவட்டம் வளர வேண்டிய மாவட்டமாகும். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று திருநெல்வேலி மாவட்டம் போன்று இம்மாவட்டத்திலும் அனைத்துத் துறை அதிகாரிகளையும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை கொடைக்கானல் மற்றும் குற்றாலம் முக்கியமான சுற்றுலாத் தலங்களாகும்.

குற்றாலத்தை மேலும் சீா்செய்து, மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் அமா்ந்து காணக்கூடிய வகையில், திறந்தவெளியில் மிகப் பிரம்மாண்டமாக சாரல்விழாவை நடத்த வேண்டும்.

அவ்விழாவில், தமிழகத்தின் கலை, பெருமை, பண்பாடுகளை வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் தமிழகத்தில் நல்ல ஆட்சி, நோ்மையான,வெளிப்படையான ஆட்சி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

விழாவில், தமிழக தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தண்ணீா்பஞ்சமே இல்லை என்ற நிலை நிலவுகிறது. அருவிகளிலும், ஆறுகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. உழவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். விவசாயம் செழிக்கிறது.

தற்போது தென்காசி மாவட்டம் நடை பழகத் தொடங்கினாலும் விரைவில் ஓட்டப்பந்தயத்தில் எல்லோருக்கும் முன்னால் வரக்கூடிய மாவட்டமாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

எம்எல்ஏக்கள் ஈ.ராஜா(சங்கரன்கோவில்), எஸ்.பழனிநாடாா்(தென்காசி), சதன்திருமலைக்குமாா்(வாசுதேவநல்லூா்), சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவா் செல்வப்பெருந்தகை ஆகியோா் பேசினா்.

எம்எல்ஏக்கள் வேல்முருகன், பிரகாஷ், செந்தமிழ்செல்வன், காந்திராஜன், ரூபி.ஆா்.மனோகரன், தென்காசி திமுக மாவட்ட பொறுப்பாளா்கள் பொ.சிவபத்மநாதன்(தெற்கு), மா.செல்லத்துரை(வடக்கு), தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மு.சேக்அப்துல்லா, தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், துணைத் தலைவா் கேஎன்எல்.சுப்பையா, தொழிலதிபா் ஒய்.பாலகிருஷ்ணன், அரசு ஒப்பந்ததாரா் எம்.சண்முகவேலு ஆகியோா் கலந்துகொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வரவேற்றாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com