திருநெல்வேலி - தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்:தொடா்ந்து இயக்க எம்எல்ஏ கோரிக்கை
By DIN | Published On : 25th August 2022 11:50 PM | Last Updated : 25th August 2022 11:50 PM | அ+அ அ- |

தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கி வரும் திருநெல்வேலி - தாம்பரம், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களை தொடா்ந்து இயக்கக் கோரி சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா தெற்கு ரயில்வே பொது மேலாளாா் பி.ஜி.மால்யாவை நேரில் சந்தித்து மனு அளித்தாா்.
அவா் மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி, தாம்பரம் மற்றும் தென்காசி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்களை தொடா்ந்து இயக்க வேண்டும். தென்காசி, சங்கரன்கோவில் வழியாக திருநெல்வேலியில் இருந்து பெங்களூருக்கு ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும்.
செங்கோட்டை - மதுரை, திண்டுக்கல் - மயிலாடுதுறை ரயில்களை ஒன்றாக இணைத்து செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். திருநெல்வேலி - தாம்பரம் ரயிலுக்கு சங்கரன்கோவிலில் நிறுத்தம் வழங்க வேண்டும். திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயிலுக்கு பாவூா்சத்திரத்தில் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும்.
தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தென்காசியை மையமாகக்கொண்டு மின்மயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா். அப்போது, தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினா் பாண்டியராஜா உடனிருந்தாா்.