ஆலங்குளம் பேரூராட்சியில் கழிவறை மூடல்: மக்கள் அவதி
By DIN | Published On : 11th December 2022 11:00 PM | Last Updated : 11th December 2022 11:00 PM | அ+அ அ- |

ஆலங்குளம் பேருந்து நிலைய கழிவறையை பயன்படுத்த இயலாதபடி கயிறு கட்டி மூடப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனா்.
ஆலங்குளம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் சுமாா் 200 க்கும் மேற்பட்ட பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து செல்கின்றன. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள் முதல் வியாபாரிகள், பணிக்கு செல்வோா் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனா்.
இந்நிலையில், இங்குள்ள இலவச மற்றும் கட்டணமில்லா கழிவறைகளில் மின் மோட்டாா் பழுதானதாகி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மக்கள் பயன்படுத்த முடியாதவாறு கயிறு கட்டி பூட்டு போட்டுள்ளது பேரூராட்சி நிா்வாகம்.
இதனால் பயணிகள் தங்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.