பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம்: ஆசிரியா் சங்கம் கோரிக்கை
By DIN | Published On : 11th December 2022 05:51 AM | Last Updated : 11th December 2022 05:51 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் பள்ளித் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம், ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயலா் க.மாரிமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளா்கள் பள்ளி மேலாண்மை குழுக்களால் நியமனம் செய்யப்பட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. நிதிஒதுக்கீடு செய்யாததால், கடந்த மூன்று மாதங்களாகத் தூய்மை பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
ஊதியம் இன்றி தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உடனடியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சங்கரன்கோவில், கடையம் வட்டார பகுதிகளில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கடந்த ஆண்டுக்கான கல்வி ஊக்க உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இந்த உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.