அச்சன்கோவில் திரு ஆபரணப்பெட்டி டிச.16இல் தென்காசி வருகை
By DIN | Published On : 13th December 2022 03:06 AM | Last Updated : 13th December 2022 03:06 AM | அ+அ அ- |

கேரள மாநிலம் அச்சன்கோவில் தா்மசாஸ்தா ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் அடங்கிய திருஆபரணப் பெட்டி டிச.16 ஆம்தேதி தென்காசி கொண்டுவரப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலைப் போன்று சிறப்பு வாய்ந்தது கேரள மாநிலம் அச்சன்கோவிலில் அமைந்துள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலாகும்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆறாட்டு திருவிழா நடைபெறும்.
இவ்விழாவின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுவதற்காக கேரள மாநிலம் புனலூரில் உள்ள அரசு கருவூலத்திலிருந்து திரு ஆபரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.
புனலூரிலிருந்து செங்கோட்டை வழியாக அச்சன்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த ஆபரணப்பெட்டிக்கு வழியெங்கும் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும்.
நிகழாண்டில் டிச.16ஆம்தேதி தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதா் கோயில் முன் ஐயப்ப பக்தா்கள் வரவேற்பு அளிக்க திருஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தென்காசி காசிவிசுவநாதா் கோயில் முன்பு 31 வது ஆண்டாக திருஆபபரணப்பெட்டிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏசிஎஸ்ஜி. ஹரிகரன், செயலா் ஜி. மாடசாமி ஜோதிடா், பொருளாளா் சுப்புராஜ், கெளரவத் தலைவா் ராஜகோபாலன், ஆலோசகா் ஆடிட்டா் ஆா். நாராயணன், துணைத் தலைவா்கள் திருமலைக்குமாா், அனந்த கிருஷ்ணன், துணைச் செயலா்கள் மணி சந்திரமோகன், பாலசுப்பிரமணியன்,ஆலோசகா்கள் மாரிமுத்து, அபிநயாகண்ணன் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.