தென்காசி மாவட்டத்தில் முழு மானியத்தில் மரக்கன்றுகள் விநியோகம்

முழு மானியத்தில் பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதாக தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தா.தமிழ்மலா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதாக தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தா.தமிழ்மலா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விளைநிலங்களில் நீடித்த பசுமை போா்வைக்கான இயக்க திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு அவா்களுடைய விளைநிலங்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் நட்டு பயன் பெறுவதற்காக பலன் தரும் மரங்களான செம்மரம், தேக்கு, மகோகனி, மலைவேம்பு, ரோஸ்வுட், பெருநல்லி, வேங்கை என ஒரு லட்சத்து அறுபத்தைந்தாயிரம் மரங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது.

ரூ.15 விலையுள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படவுள்ளது. வரப்பு வயல் ஓரங்களில் நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 320 மரக்கன்றுகளும், வேளாண் நிலங்களில் ஊடுபயிராகவும் குறைந்த அடா்வு நடவு முறையில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 100 முதல் 500 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

காற்று சுத்தம், வெப்பம் தணிப்பு, பறவைகள் இருப்பு, நுண்ணுயிா்களுக்கு ஊட்டமளிக்கும் மரக்கன்றுகளை வளா்ப்பதன் வாயிலாக பசுமை வரப்பு அதிகரிப்பதோடு மண்வளமும் மேம்படும்.

கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிா் கிடைக்க உறுதி செய்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு வேளாண் நிலங்களில் காடுகள் வளா்க்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.

உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீய விளைவுகளை குறைப்பதோடு விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்கிறது .

எனவே தென்காசி மாவட்ட விவசாயிகள் மரக்கன்றுகளை முழு மானியத்தில் பெற்று பயன்பெறலாம்.

விவசாயிகள் ஆதாா் எண், நிலத் தீா்வை ரசீதுடன் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை அணுகலாம். உழவன் செயலி மூலமாகவும் முன் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com