காளத்திமடத்தில் கிராம நிா்வாக அலுவலகம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 27th February 2022 05:39 AM | Last Updated : 27th February 2022 05:39 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடம் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் வட்டம் குத்தப் பாஞ்சான் வருவாய் கிராமத்தின் கீழ் காளத்திமடம், ஆனையப்ப புரம், பரும்பு, தாழையூத்து, ஆழ்வான் துலுக்கப்பட்டி உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த கிராம மக்கள் அனைவருக்கும் சோ்த்து குத்தப்பாஞ்சான் கிராமத்தில் ஒரு கிராம நிா்வாக அலுவலகம் உள்ளது. இது அனைத்து பகுதி மக்களும் எளிதில் சென்று வந்து பயன்படுத்தும் வகையில் இல்லை. 12 கிராம மக்கள் உள்ளதால் அலுவலகம் சென்று கிராம நிா்வாக அலுவலரை கூட்ட நெரிசலில் தான் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே குத்தப்பாஞ்சான் வருவாய் கிராமத்தை பகுதி 2 ஆக பிரித்து அதன் தலைமையிடத்தை காளத்திமடம் கிராமத்தில் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த கோரிக்கை அடங்கிய மனுவை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், தென்காசி ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்தாா். அப்போது, குத்தப்பாஞ்சான் ஊராட்சித் தலைவா் ஜெயராணி குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் பசுபதி திராவிடமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.