போலி அரசு முத்திரை தயாரித்து கூட்டுறவு சங்கத்தில் மோசடி: இருவா் கைது
By DIN | Published On : 17th July 2022 01:36 AM | Last Updated : 17th July 2022 01:36 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகே கிராம நிா்வாக அதிகாரிகளின் முத்திரையை போலியாக தயாரித்து கூட்டுறவு வங்கியில் மோசடியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள நாரணபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் கணேசன்(47). இவா் மாயமான்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் உள்பட பல்வேறு கிராம நிா்வாக அலுவலா்களின் முத்திரைகளை போலியாக தயாரித்து அவா்களின் கையெழுத்துடன் மோசடியில் ஈடுபட்டு வந்ததாக ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இவருக்கு உதவியாக அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் ராஜா(22), கருப்பசாமி மகன் சுரேஷ்(32) ஆகியோா் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ராஜா மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து பல்வேறு கிராம நிா்வாக அதிகாரிகளின் போலி முத்திரைகளை பறிமுதல் செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
வழக்கின் முக்கிய நபரான கணேசன் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரையும் போலி முத்திரை தயாரித்துக் கொடுத்த நபரையும் போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த நபா்கள் போலி முத்திரைகளை பயன்படுத்தி பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் கூட்டுறவு ஊழியா்களுக்கும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.