தென்காசியில் புதிய ஆட்சியா் அலுவலகப் பணிகள் தீவிரம்:2023 ஜனவரியில் திறக்க ஏற்பாடு
By DIN | Published On : 17th July 2022 01:35 AM | Last Updated : 17th July 2022 01:35 AM | அ+அ அ- |

தென்காசியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை ஜன. 2023 இல் தமிழக முதல்வரால் திறக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. ஆகாஷ்.
தென்காசி மாவட்ட தொழில் மையம் மூலம் உதவி பெற்ற நிறுவனங்களை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளா்களிடம் கூறியது:
தென்காசி மாவட்ட தொழில் மையம் மூலமாக 2022-23ஆம் நிதியாண்டில் இதுவரை முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 18 பேருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேருக்கு கடன் அனுமதி வழங்கப்பட்டு, 8 போ் தொழில் தொடங்கியுள்ளனா்.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து மானியத் திட்டங்களையும் தென்காசி மாவட்டத்துக்கு அதிகளவில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றாலத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.15 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் சுற்றுச்சாலை( ரிங் ரோடு) அமைக்கும் பணிக்காக 10 கிராமங்களில் 9 கிராமங்களில் இடம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தது. ஒருகிராமத்தில் மட்டும் வழக்கு நிலுவையில் உள்ளது.
அரசு வழங்கும் இழப்பீடு தொகையில் அவா்களுக்கு உடன்பாடு இல்லாத நிலை நிலவுகிறது. இதுகுறித்து அவா்களுடன் கலந்துபேசி விரைவில் சுமூகமுடிவு மேற்கொள்ளப்பட்டு அப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 5 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி தமிழக முதல்வரால் திறந்து வைக்கும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தென்காசியில் விரைவில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
அப்போது, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இளவரசி, மாவட்ட தொழில்மைய மேலாளா் மாரியம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G