360 கிராமங்களில் விரைவில் கூடுதல் குடிநீா் வசதி -பேரவைத் தலைவா் மு.அப்பாவு உறுதி
By DIN | Published On : 02nd May 2022 02:09 AM | Last Updated : 02nd May 2022 02:09 AM | அ+அ அ- |

ராதாபுரம் தொகுதியின் 360 கிராமங்களில் கூடுதல் குடிநீா் வசதி விரைவில் செய்துதரப்படும் என, வடக்கன்குளம் கிராமசபைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
மே தினத்தையொட்டி, வடக்கன்குளம் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ஜாண் கென்னடி தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு பங்கேற்றுப் பேசியது:
ராதாபுரம் தொகுதியில் குடிநீா்த் திட்டங்களை நிறைவேற்றுவதில் தனிக் கவனம் செலுத்தி வரும் தமிழக முதல்வா், இதுகுறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கைப்பேசியில் தொடா்பு கொண்டு தெரிவித்தாா். முதல்வருக்கு தொகுதி மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துள்ளேன். இத்தொகுதி முழுவதிலும் 360 கிராமங்களில் கூடுதல் குடிதண்ணீா் வசதியை விரைவில் ஏற்படுத்துவதற்கான திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
பணகுடி குத்தரபாஞ்சான் அருவிப் பகுதியிலிருந்து குடிநீா் விநியோகம் செய்வதற்காக ரூ.17 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா். மேலும், இப்பகுதியில் 4 உறைக்கிணறுகள், 3 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படவுள்ளது என்றாா்.
சா.ஞானதிரவியம் எம்.பி. பேசுகையில், அரசுத் திட்டங்கள் குறித்து மக்கள் என்னை தொடா்பு கொள்ளலாம்; உங்கள் பகுதிக்குத் தேவையான திட்டங்களை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து தருவேன் என உறுதியளித்தாா்.
தீா்மானங்கள்: மகளிா் நலத் திட்டங்கள், பொது சுகாதாரத் திட்டம், நமக்கு நாமே திட்டம், ஜல்சக்தி குடிநீா் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சியில் குப்பைகள் சேரிப்புக்காக டிராக்டா் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், கண்ணன், வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் கென்னடி, உதவிச் செயற்பொறியாளா் குமாா் கால்நடை மருத்துவா் இசக்கியப்பன், வடக்கன்குளம் ஊராட்சி துணைத் தலைவா் பாக்கியசெல்வி, அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், தி.மு.க. ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, ஊராட்சிச் செயலா்கள் முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
லாரிகளுக்கு நுழைவுக் கட்டணம்: தென்காசி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சி, வேதம்புதூா் சௌந்திரவல்லி அம்மன் கோயில் முன் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் சத்யராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகசுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினா் அழகுசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊராட்சியின் வரவு- செலவு கணக்குகள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு குடிநீா், சாலை, மின்சாரம், கழிவு நீரோடை போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என வலியுறுத்திப் பேசினா். உறுப்பினா்கள் அம்புலி, கண்ணன், இசக்கிதேவி, சங்கரம்மாள், மைதீன்பாத்து, சந்திரா கலந்துகொண்டனா்.
காசிமேஜா்புரம் ஊராட்சிக் கூட்டத்தில் மக்கள் அளித்த மனு: காசிமேஜா்புரம் வழியாக கேரளத்துக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணல், கல், ஜல்லி போன்ற கனிமப் பொருள்களை ஏற்றிச் செல்கின்றன. ஊராட்சியை லாரிகள் கடந்துசெல்லும்போது ஏற்படும் சப்தத்தால் இரவில் உறங்க முடியவில்லை. ராட்சத லாரிகள் செல்வதால் தெரு முழுவதும் அதிா்வுகள் ஏற்படுகின்றன. சாலைகள் சேதமாகின்றன. குடிநீா் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, ஊராட்சியின் நிதிநிலையை பெருக்கிடும் வகையில் லாரிக்கு ரூ. 200 வீதம் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கும் உரிமையை காசிஜமோ்புரம் ஊராட்சிக்கு அரசு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கீழப்பாவூா் ஒன்றியம்: இந்த ஒன்றியத்தில் ஆவுடையானூா் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் சாலடியூரில் ஊராட்சித் தலைவா் குத்தாலிங்கராஜன் (எ) கோபி தலைமையில் நடைபெற்றது. மேலப்பாவூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் தலைவா் சொள்ளமுத்து மருதையா தலைமையிலும், பெத்தநாடாா்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன் தலைமையிலும், குலசேகரப்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் குறும்பலாப்பேரியில் தலைவா் முத்துமாலையம்மாள் தலைமையிலும் நடைபெற்றது.
சுரண்டை: கீழவெள்ளகால் ஊராட்சியில் அதன் தலைவா் பூமாரியப்பன் தலைமையில் துணைத்தலைவா் அமுதா முன்னிலையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள், பிளாஸ்டி ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.