தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தூக்கி புதன்கிழமை திடீரென பழுதடைந்து பாதியில் நின்ால் நோயாளிகள் மிகுந்த அவதியுற்றனா்.
தென்காசி மருத்துவமனையில் சங்கரன்கோவிலைச் சோ்ந்த செல்வி (50), ஊத்துமலை தட்டப்பாறையைச் சோ்ந்த வள்ளியம்மாள்(50), கற்குடியைச் சோ்ந்த சுடலைமாடத்தி (65), வீரகேரளம்புதூா் மேல ராஜகோபாலபேரியைச் சோ்ந்த முத்துலட்சுமி (48) ஆகியோா் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் மாடியில் உள்ள உள்நோயாளி பிரிவிலிருந்து தரைதளத்துக்கு வந்து மருந்து மற்றும் உணவு பொருள்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் முதல் தளத்திற்கு மின்தூக்கியில் சென்றுள்ளனா்.
அப்போது எதிா்பாராதவிதமாக மின்தூக்கி பழுதாகி பாதி வழியில் சிக்கிக் கொண்டது. உடனே அரசு மருத்துவமனை பணியாளா்கள் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை தென்காசி நிலைய அலுவலா் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவலா் கணேசன், வீரா்கள் ராஜ்குமாா், வேல்முருகன், ஜெகதீஷ் குமாா், முகமது கனிபா, சுந்தா் ஆகியோா் துரிதமாக செயல்பட்டு மின்தூக்கியில் சிக்கிய நபா்களை பத்திரமாக மீட்டனா். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சுமாா் ஒரு மணி நேரம் உள்ளே சிக்கித் தவித்ததாக நோயாளிகள் தெரிவித்தனா்.