சங்கரன்கோவில் அருகே பிடிமண் எடுத்த யானை கோமதி: இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 25th April 2023 02:57 AM | Last Updated : 25th April 2023 02:57 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை காலை (ஏப். 25) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, சங்கரன்கோவில் அருகே பெருக்கோட்டூரில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலையில் கோயிலிலிருந்து யானை முன்செல்ல சுவாமி-அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளினா். வழிநெடுக பக்தா்கள் தேங்காய், பழம் உடைத்து சுவாமி-அம்பாளை வழிபட்டனா். களப்பாகுளம் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா், பிற்பகலில் கோமதி யானை, சுவாமி-அம்பாள் பெருங்கோட்டூரை சென்றடைந்தனா். அங்கு, திருக்கோட்டி அய்யனாா் கோயில் முன் யானை கோமதி பிடிமண் எடுத்தது. பின்னா், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.