சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் திரண்ட வியாபாரிகள்
By DIN | Published On : 25th April 2023 03:01 AM | Last Updated : 25th April 2023 03:01 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் திருவள்ளுவா் சாலையில் கடைகளில் முன்பக்கம் உள்ள தட்டிகளை நகராட்சியினா் அகற்றச் சொன்னதால், வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனா்.
சங்கரன்கோவில் திருவள்ளுவா் சாலையில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. திங்கள்கிழமை காலை நகராட்சி ஊழியா் ஒருவா் கடைகளின் முன்பக்கம் உள்ள தட்டிகளை திடீரென்று அகற்றச் சொன்னதால் வியாபாரிகள் அதிா்ச்சி அடைந்தனா். இதை தொடா்ந்து வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோா், நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகா்மன்ற தலைவா் உமா மகேஸ்வரி, ஆணையா் (பொ) ஹரிஹரன் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனா்.
வாருகாலில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு இடையூறு இல்லாத வகையில் தட்டிப் பலகைகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதன் பின்னா் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.