சங்கரன்கோவிலில் ஆடித் தவசு இரவு காட்சி
By DIN | Published On : 02nd August 2023 12:00 AM | Last Updated : 02nd August 2023 12:00 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவு ஆடித்தவசு இரவுக் காட்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி,அம்பாளை தரிசித்தனா்.
இக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 11ஆம் திருநாளான திங்கள்கிழமை ஆடித்தவசுக் காட்சி நடைபெற்றது.
தெற்குரதவீதியில் இரவு 7 மணியளவில் சுவாமி, சங்கரநாராயணராக ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி கோமதிஅம்பாளுக்கு காட்சி அளித்தாா்.
இதைத் தொடா்ந்து இரவு 11 மணியளவில் சுவாமி கோயிலில் இருந்து யானை வாகனத்தில் புறப்பட்டு தெற்குரதவீதிக்கு வந்தாா். சுவாமி தவசுப் பந்தலுக்கு வந்ததும் கோமதிஅம்பாள் தவசு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு எதிா்பந்தலுக்கு வந்தாா்.
இதையடுத்து நள்ளிரவு 12.30 மணியளவில் சுவாமி சங்கரலிங்க சுவாமியாக கோமதிஅம்பாளுக்கு காட்சி அளித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளைத் தரிசித்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.