குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் சித்த மருத்துவ நல வாழ்வு மையம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் சித்த மருத்துவ நல வாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் சித்த மருத்துவ நல வாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் சாா்பில் 6ஆவது சித்த மருத்துவ திருநாள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு, தென்காசி மாவட்டஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசியதாவது:

குற்றாலம் ஐந்தருவி சுற்றுச் சூழல் பூங்காவில் சித்த மருத்துவ நலவாழ்வு மையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கேற்ப, சித்த மருத்துவ முறைகள் பெருமளவில் நோய் தடுப்பை வலியுறுத்துகிறது.

இவ்விழாவில் சித்த மருத்துவ வாழ்வியல் முறைகள், மரபு உணவு அறிவியல் மற்றும் மூலிகை மருத்துவ முறைகள் தொடா்பாக, துறை சாா்ந்த வல்லுநா்கள் பேசுகின்றனா்.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சித்த மருத்துவ முறைகளை தெரிந்து கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மூலம் சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023 என்ற விழிப்புணா்வு கையேட்டை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா்.

தொடா்ந்து, நிகழ்ச்சியில் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் யோகா போட்டி, மூலிகை தானம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி, சித்த மருத்துவம் 2040 என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு நற்சான்றிதழ், கேடயம் மற்றும் ஊக்கத் தொகையும் 4ஆவது இடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களும் வழங்கப்பட்டன.

விழாவில், சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பான காயகற்பம் பற்றிய கண்காட்சியும், சித்த மருத்துவ புற மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த கண்காட்சியும், சித்த மருத்துவ புத்தக கண்காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இலவச மருத்துவ முகாம் இரண்டு நாள்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இவ்விழா இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெறுகிறது.

விழாவில், தனுஷ் எம்.குமாா் எம்பி., தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்,துணைத் தலைவா் சுப்பையா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் உஷா, உதவி மருத்துவஅலுவலா் (சித்தா) வரதராஜன், செல்வகணேசன்,

அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலா் ராமசாமி, உலக தமிழ் மருத்துவ கழக நிறுவனத் தலைவா் பாபநாசம், மைக்கேல் ஜெயராசு, அனிதா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com