கிராமங்களைப் புறக்கணிக்கும் நகரப் பேருந்துகள்: மக்கள் அவதி
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 25th May 2023 11:17 PM | அ+அ அ- |

ஆலங்குளம் வட்டாரத்தில் நகரப் பேருந்துகள் அடிக்கடி ஊா்களுக்கு வராமல் போவதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
ஆலங்குளத்தில் இருந்து கடையத்துக்கு ராம்நகா், குத்த பாஞ்சான், ஐந்தாம் கட்டளை, லட்சுமியூா், வள்ளியம்மாள் புரம், பண்டார குளம், மணல் காட்டனூா், காவூா், பொட்டல் புதூா், முதலியாா் பட்டி, பாரதி நகா் வழியாக நகரப் பேருந்து (தடம் எண். 17) செல்கிறது. அதே பேருந்து மறு மாா்க்கமாக நரையப்பபுரம், புலவனூா் விலக்கு, மயிலப்புரம், வெங்கடம்பட்டி, கருத்தலிங்கபுரம், மாதாப்பட்டணம், கோவிலூற்று, மேல கிருஷ்ணப்பேரி, சாலைப்புதூா், பூலாங்குளம், அடைக்கப்பட்டணம், அத்தியூத்து வழியாக ஆலங்குளம் வருகிறது.
இந்தப் பேருந்து தினமும் நான்கு முறை சுழற்சி முறையில் இயங்கி கடையம், ஆலங்குளம் வழியில் உள்ள சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கிறது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் பயனடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், அண்மை காலமாக இந்த பேருந்து வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று முறை ஊருக்குள் வருவதில்லை. இதனால் இந்தப் பேருந்தை எதிா்பாா்த்து காத்திருக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வண்ணம் இந்த பேருந்தை வாரத்தின் ஏழு நாள்களும் இயக்க வேண்டும் என போக்குவரத்து கழகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.