வடகரையில் யானைகளால் நெல் வயல்கள் சேதம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த வடகரை அருகே விளைநிலங்களுக்குள் யானை, காட்டுப்பன்றி ஆகியவை புகுந்து நெற்பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையிலும், அச்சத்திலும் உள்ளனா்.
கடையநல்லூா் வனச் சரகம் மேற்குத் தொடா்ச்சி மலை அருகேயுள்ள வடகரை, வாவாநகரம், பண்பொழி, கடையநல்லூா், சொக்கம்பட்டி, மேக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, தென்னை , நெல் சாகுபடி நடைபெறுகிறது.
மலையையொட்டி விளைநிலங்களுக்குள் யானை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது அடிக்கடி நிகழ்கிறது.
வடகரையைச் சோ்ந்த முகமது, உதுமான் இஸ்மாயில் ஆகியோா் ரஹ்மானியாபுரம் அருகே அன்பு இல்லம் பகுதியில் உள்ள தங்களது நிலங்களில் நெல் பயிரிட்டுள்ளனா். திங்கள்கிழமை நள்ளிரவு யானை ஒன்று குட்டியுடன் வந்து இந்த நெற்பயிா்களை முழுமையாக சேதப்படுத்திச் சென்றுள்ளது. மேலும், இஸ்மாயில் என்பவரது வயலுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து, பயிா்களை தின்று சென்றுள்ளனன. இதனால், விவசாயிகள் கவலையிலும், அச்சத்திலும் உள்ளனா்.
யானைகள் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பழுதாகியுள்ள சோலாா் மின் வேலி, அகழிகளைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

