கடையநல்லூரில் மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் குடும்பத் தகராறில் மனைவியை கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 10ஆயிரம் அபராதம் விதித்து, தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகள் வேல்மதிக்கும் (22), கடையநல்லூா் பாரதியாா் தெருவை சோ்ந்த க. ராமா்(38) என்பவருக்கும் கடந்த 04.09.2016 இல் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து ராமா் மாலத் தீவுக்கு வேலைக்கு சென்றுவிட்டாராம். அதன் பின்னா் இரண்டு மாதம் கழித்து விடுமுறைக்கு கடையநல்லூா் வந்து இரண்டு மாதம் தங்கிவிட்டு மீண்டும் மாலத்தீவுக்கு சென்றுவிட்டாராம். மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துள்ளாா்.
இந்நிலையில், கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன்கோயில் தெருவுக்கு ராமா் தம்பதி தனிக் குடித்தனம் சென்றுவிட்டனா்.
கடந்த 12.04.2018ஆம் தேதி இரவு தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராமா், வேல்மதியின் கழுத்தில் தையல் மிஷினில் உள்ள பெல்டால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வேல்மதியின் தாய் வெள்ளத்தாய் அளித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமரை கைது செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். மனோஜ்குமாா், குற்றவாளி ராமருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ். வேலுச்சாமி ஆஜரானாா்.

