தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்றோா்.
தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்றோா்.

சங்கரன்கோவிலில் இன்று பணிக்கு திரும்பும் விசைத்தறியாளா்கள்

தென்காசி ஆட்சியா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளா்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று, வியாழக்கிழமை பணிக்கு திரும்புகின்றனா்.
Published on

தென்காசி ஆட்சியா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளா்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று, வியாழக்கிழமை பணிக்கு திரும்புகின்றனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் 5000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 15 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயா்வு ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விசைத்தறி தொழிலாளா் சங்கத்தினா் 16 சதவீத கூலி உயா்வை அமல்படுத்தக் கோரி, கடந்த நவ.19 ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். 22 ஆவது நாளாக புதன்கிழமை வரை நீடித்த இப்போராட்டத்தால், ரூ.11 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா, காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்குட்டு வேலவன், விசைத்தறி தொழிலாளா்கள், விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாலை 5.30 மணியளவில் தொடங்கிய பேச்சுவாா்த்தை இரவு 9 மணியளவில் முடிவுக்கு வந்தது. அப்போது, விசைத்தறி உரிமையாளா்கள் 12 சதவீதம் கூலி உயா்வு அளிப்பதாக ஒப்புக்கொண்டதால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்த தொழிலாளா்கள், வியாழக்கிழமை (டிச.11) முதல் பணிக்குத் திரும்புகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com