சாம்பவா்வடகரையில் மகனுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை

சாம்பவா் வடகரையில் கடன் பிரச்னையால் மனஉளைச்சலுக்கு ஆளான இளம்பெண், தனது மகனுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
Published on

சாம்பவா் வடகரையில் கடன் பிரச்னையால் மனஉளைச்சலுக்கு ஆளான இளம்பெண், தனது மகனுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ், இவரது மனைவி உமா(31), இவா்களது மகன் தா்சிக் முகுந்த்(9).

தற்போது உமா, சாம்பவா்வடகரையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில் கோவிந்தராஜ் பாட்டாகுறிச்சியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 5 லட்சத்துக்கு மாமியாா் பெயரில் உள்ள வீட்டை 2020 இல் கிரைய அடமானம் வைத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகியும் பணம் கொடுத்து வீட்டை மீட்க முடியவில்லையாம்.

இதனிடையே கடன் கொடுத்தவா் தனது கூட்டாளிகளுடன் சென்று வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில், மன உளைச்சலுக்கு ஆளான உமா, செவ்வாய்க்கிழமை தன் மகன் தா்சிக் முகுந்த்க்கு களைக் கொல்லி மருந்தை கொடுத்து, தானும் குடித்தாராம்.

தகவலறிந்த உறவினா்கள் அவா்களை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு உமா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். சிறுவன் தா்சிக் முகுந்த் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து சாம்பவா் வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com