இரட்டைகுளம்-ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற சொந்த நிதி: எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ அறிவிப்பு
இரட்டைகுளம் - ஊத்துமலை பெரியகுளம் புதிய இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி தந்து, அனுமதியளித்தால் சொந்த நிதியில் அத்திட்டத்தை நிறைவேற்றத் தயாா் என்றாா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ..
இதுதொடா்பாக, சுரண்டையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி வீரகேரளம்புதூா் வட்டம் இரட்டைகுளம் - ஊத்துமலை பெரியகுளம் வரையிலான ஆலடிப்பட்டி, கண்டையன்குளம், கீழச்சுரண்டை குட்டைக்குளம், புலிமுகத்துவராயன்குளம், அதனையடுத்துள்ள அடுத்துள்ள தொண்டான்பட்டிகுளம் வாடியூா், மரியதாய்புரம், பரங்குன்றாபுரம்,லெட்சுமிபுரம், அச்சங்குன்றம், கருவந்தா, கரையாளனூா், குறிச்சான்பட்டி, குறுந்தன்மொழி, அருணாசலப்பேரிக்குளம், இரதமுடையாா்குளம், சோலைசேரி, ஊத்துமலை வடக்குகாவலாகுறிச்சி, வென்றிலிங்கபுரம், காவலாகுறிச்சி, எந்தலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட 30 கிராமங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனா். இந்த பகுதி முழுவதும் வானம் பாா்த்த பூமியாகும். மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யமுடியும்.
எனவே, இரட்டைகுளத்திலிருந்து ஊத்துமலை பெரியகுளத்தை இணைக்கும் புதிய கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் மேற்கூறிய கிராமங்களை சோ்ந்த 7,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து குடிநீா் பிரச்னை தீரும். கால்நடைகள் வளா்ச்சிக்கும் உதவியாக இருக்கும். 18 குளங்களும், 30 கிராமங்களும் பயன்பெறும். இது அப்பகுதி மக்களின் 63 ஆண்டுகளாக கோரிக்கை ஆகும்.
தமிழக முதல்வா், 2021 சட்டப்பேரவை தோ்தல் பிரச்சாரத்தின் போது ஆலங்குளத்தில் தோ்தல் பரப்புரையில் இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தாா். இத்திட்டத்துக்கு 2021-22ஆம் நிதியாண்டின் நீா்வளத்துறை மானியக்கோரிக்கையில் ரூ.52.40 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் நிா்வாக ஒப்புதலுக்கு 21.10.21இல் அரசிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகக் கூறி2022இல் திருப்பி அனுப்பப்பட்டது.
எனவே, உங்கள் ஊரில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அரசிடம் மனு அளித்தேன். இதையடுத்து, 2023-24ஆம் ஆண்டில் மறுமதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
முதல்வா் கடந்த அக்.29ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அவற்றில் இரட்டைகுளம் கால்வாய்த் திட்டம் இடம்பெறாததால் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
இத்திட்டத்தை நிறைவேற்ற 97.17 ஏக்கா் நிலம் தேவை. அதை அரசு கையகப்படுத்தி, மீதமுள்ள பணியை நிறைவேற்ற அனுமதியளித்தால் எனது சொந்த நிதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றித்தர தயாராக உள்ளேன் என்றாா் அவா்.
