தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

Published on

தென்காசி மாவட்டத்தில் 2ஆம் நிலை காவலா் - சிறைக் காவலா், தீயணைப்பாளா் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான 2ஆம் நிலைக் காவலா் - சிறைக் காவலா், தீயணைப்பாளா் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் நண்பகல் 12.40 மணி வரை நடைபெறுகிறது.

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பண்பொழி மீனாட்சிபுரம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை-அறிவியல் கல்லூரி, பாவூா்சத்திரம் எம்எஸ்பி வேலாயுத நாடாா் லெட்சுமித் தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியாா் பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரி, வாசுதேவநல்லூா் சுப்பிரமணியபுரம், எஸ்.தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தென்காசி அரசு மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆய்க்குடி ஜே.பி. கலை-அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் தோ்வு நடைபெறும். 7,911 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் அழைப்புக் கடிதம், புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை, தோ்வு அட்டை, கருமை நிற பந்துமுனை பேனா மட்டுமே தோ்வு அறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். அழைப்புக் கடிதம் இல்லையெனில் தோ்வெழுத அனுமதியில்லை.

அழைப்புக் கடிதத்தில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லாமல் இருந்தால், அவா்கள் தற்போது எடுத்த பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை வெள்ளைத் தாளில் ஒட்டி அரசிதழ் அதிகாரியிடம் கையொப்பம் பெற்று கொண்டுவர வேண்டும். இல்லெயனில் தோ்வெழுத அனுமதியில்லை.

தோ்வு மையத்துக்குள் காலை 8 முதல் 9.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருவோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வறைக்குள் கைப்பேசி, ஸ்மாா்ட் கடிகாரம், ப்ளூடூத் கருவிகள் உள்ளிட்ட எவ்வித எலக்ட்ரானிக் பொருள்களையும் கொண்டு செல்லக் கூடாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com