வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தென்காசி மாவட்டத்தில் வேளாண் தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு வேளாண் தொழில்நுட்ப அடிப்படையிலான புத்தாக்க நிறுவனங்களுக்கு அவற்றின் நோக்கம், நிலைத்தன்மை, வணிகத் திட்டத்தின் அடிப்படையில முதலீட்டு நிதி ஆதரவு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் வளா்ச்சி நிலையில் உள்ள புதிய புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம், சந்தைப்படுத்துதலுக்குரிய தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. வேளாண் சாா்ந்த தொழில்நுட்பங்களான மதிப்பு கூட்டுதல் வேளாண் விளைபொருள்களின் காலாவதியாகும் நாள்களை அதிகப்படுத்தும் தொழில்நுட்பம், சேமிப்பு கிடங்குகள், பயிா் சாகுபடி, வேளாண் கருவிகளுக்கான தொழில்நுட்பங்கள், குறைவான தண்ணீா் பயன்பாட்டிற்கான தொழில்நுட்பங்கள் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். உடனடியாக உண்ணக்கூடிய பொருள்களை தயாரிக்கும் புத்தாக்க நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் தகுதியானவை அல்ல. இதற்கு இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), தென்காசி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள் தோ்வு செய்யப்படும்.
பயன்பெற விரும்புவோா் மாநில புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க நிறுவனம் அல்லது ஸ்டாா்ட்அப் இந்தியாவின் கீழ் அவசியம் பதிவுசெய்திருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் சராசரி நிகர வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையத்திலும், வேளாண்மை துணை இயக்குநா், வேளாண் வணிக அலுவலா்களையும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
