பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின்.

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1,020 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள்: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தென்காசியில் ரூ. 1,020 கோடி மதிப்பில் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, 2,44,469 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.
Published on

தென்காசியில் ரூ. 1,020 கோடி மதிப்பில் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, 2,44,469 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.

தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் கலந்து கொண்டு, ரூ. 141.60 கோடியில் 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ. 291.19 கோடியில் 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

மேலநீலிதநல்லூரில் ரூ. 1 கோடியில் அரசு தோட்டக்கலை பண்ணை, கடையத்தில் ரூ. 1.26 கோடியில் எலுமிச்சை சிறப்பு மையம், குருவிகுளத்தில் ரூ. 50 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையம், தென்காசி அரசு மருத்துவமனையில் ரூ. 22 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு கட்டடம், தென்காசியில் ரூ. 1 கோடியில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், இலத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 73 லட்சத்தில் தடுப்பூசிக் கிடங்கு, ஆய்க்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.82 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், அச்சன்புதூா், ஆய்க்குடி, கீழப்பாவூா் ஆகிய இடங்களில் ரூ. 95 லட்சத்தில் சுகாதார துணை மையங்கள், தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் ரூ. 5.32 கோடியில் தினசரி சந்தை, நகராட்சி தினசரி சந்தையில் ரூ. 40 லட்சத்தில் பொது சுகாதார வளாகம், தென்காசி நகராட்சியில் ரூ. 25 லட்சத்தில் குடிநீா் குழாய்கள் என ரூ. 141 கோடியே 59 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான 117 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தாா்.

தென்காசி நகராட்சியில் ரூ. 69.45 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள், சாம்பவா் வடகரை-ஹனுமா நதியின் குறுக்கே ரூ. 5.55 கோடியில் தடுப்பணை, இராமநதிஅணையின் கரை ரூ. 1.58 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள், கலிங்கப்பட்டியில் ரூ. 65 லட்சத்தில் கால்நடை மருந்தகக் கட்டடம், ரூ. 94.50 கோடியில் சங்கரன்கோவில், தென்காசி புறவழிச் சாலைகள், வாசுதேவநல்லூரில் ரூ. 6.58 கோடியில் கூடுதல் சேமிப்புக் கிடங்கு என ரூ. 291 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

மேலும், 50,650 பயனாளிகளுக்கு பட்டாக்கள், 6,230 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம், 200 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி, 550 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட ரூ. 587 கோடியே 38 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,44,469 பயனாளிகளுக்கு முதல்வா் வழங்கினாா்.

அமைச்சா்கள் கே.என். நேரு, இ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி. கீதா ஜீவன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ், எம்.பி.க்கள் கனிமொழி (தூத்துக்குடி), ராணி ஸ்ரீகுமாா் (தென்காசி), ராபா்ட் புரூஸ் (திருநெல்வேலி), எம்எல்ஏ.க்கள் எஸ். பழனி நாடாா் (தென்காசி), ஈ. ராஜா (சங்கரன்கோவில்), அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்), கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், மாவட்ட திமுக பொறுப்பாளா்கள், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், திமுக ஒன்றியச் செயலா்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், பேரூராட்சி மன்றத் தலைவா்கள், தென்காசி நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com