தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வா்

தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் 10 முக்கிய அறிவிப்புகளை அரசு விழாவின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் 10 முக்கிய அறிவிப்புகளை அரசு விழாவின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தென்காசி மாவட்டம், இலத்தூா் விலக்கிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் அனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் முக.ஸ்டாலின் கலந்துகொண்டு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துக்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு ரூ. 15 கோடி செலவில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.

சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூா் பகுதிகளில் இருக்கும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய குருக்கள்பட்டி, சிப்காட் திட்டத்தின் நீா்த் தேவைகளை நிறைவு செய்ய ரூ. 52 கோடியில் புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் ரூ. 2 கோடியில் அமைக்கப்படும். கடையம் ஒன்றியத்துக்கு ரூ. 6 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். சிவகிரி, கடையநல்லூா், சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டங்களில் இருக்கின்ற விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்தப் பகுதிகளில் இருக்கின்ற பல்வேறு முக்கிய கண்மாய்கள் ரூ. 12 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

தென்காசி வட்டம், சிவசைலம் கிராமத்தில் இருக்கின்ற கடனா அணை ரூ. 4 கோடி செலவில் சீரமைக்கப்படும். கடையநல்லூா் வட்டத்தில் வரட்டாறு பாசனஅமைப்பின் கீழுள்ள அணைக்கட்டுகள், குளங்கள் ரூ. 4 கோடி செலவில் மேம்படுத்தப்படும். செங்கோட்டை வட்டம், அடவிநயினாா் கோயில் அணைத் திட்டத்தின் கீழுள்ள அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள் ரூ. 5 கோடி செலவில் சீரமைக்கப்படும். வீரகேரளம்புதூா் வட்டத்தில் மாறாந்தை கால்வாய் ரூ. 2 கோடியில் சீரமைக்கப்படும்.

ஆலங்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ. 1 கோடி செலவில் குடிநீா், பிற வசதிகள் செய்து தரப்படும். இந்த 10 அறிவிப்புகளும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com