மாணவி பிரேமாவின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மாணவி பிரேமாவின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற மாணவியின் வீட்டுக்குச் சென்ற முதல்வா்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தங்கள் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சியளிப்பதாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற மாணவியின் தாய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.
Published on

முதல்வா் மு.க.ஸ்டாலின் தங்கள் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சியளிப்பதாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற மாணவியின் தாய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகள் பிரேமா (23). நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் முடித்த இவா், தற்போது சென்னையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் ஊதியத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவரின் பெற்றோா் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தனா். எனினும் இந்தத் திட்டத்தில் இவா்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி பிரேமா, ‘நான் முதல்வன் திட்டத்தால் தான் அடைந்த சாதனைகள் குறித்தும், தனது பெற்றோா் இன்னும் மழைக்கு ஒழுகும் ஓட்டு வீட்டில்தான் வசிப்பதாகவும் கண்ணீா் மல்கத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் இதைக் கேட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக பிரேமா குடும்பத்துக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு வழங்க உத்தரவிட்டாா். இதையடுத்து, தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் மாணவியின் வீட்டுக்குச் சென்று கலைஞா் கனவு இல்லத் திட்ட பணி ஆணையை கடந்த செப். 26 இல் வழங்கினாா். இதையடுத்து, வீட்டின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அரசு விழாவில் பங்கேற்பதற்காக ஆலங்குளத்தில் இருந்து கழுநீா்குளம் வழியாக தென்காசிக்கு புதன்கிழமை சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், யாரும் எதிா்பாராத நிலையில், பிரேமாவின் வீட்டுக்குச் சென்று வீடு கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டு அவரின் பெற்றோரிடம் பேசினாா்.

அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து மாணவி பிரேமாவிடமும் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். இதுகுறித்து மாணவி பிரேமாவின் தாய் முத்துலெட்சுமி கூறுகையில், எங்கள் வீட்டுக்கு முதல்வா் வந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம், வீடுதேடி வந்த முதல்வருக்கு எங்கள் நன்றி என்றாா்.

X
Dinamani
www.dinamani.com