போதைப் பொருள் இல்லா ஆலங்குளம்- காவல்துறை வேண்டுகோள்
போதைப் பொருள் இல்லாத ஆலங்குளத்தை உருவாக்க வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என ஆலங்குளம் காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆலங்குளம் காவல்துறையினா்-வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம், ஆலங்குளம் சமுதாய நலக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தலைமை வகித்தாா். ஆய்வாளா் ஆடிவேல், காவல் உதவி ஆய்வாளா்கள் மாரியப்பன், ஆசீா் ஜெபராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
டிஎஸ்பி பேசுகையில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்றவை ஆலங்குளம் பகுதியில் அதிக அளவில் விற்கப்படுவதாக புகாா் வந்துள்ளது. இதை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து போதைப் பொருள் இல்லா ஆலங்குளத்தை உருவாக்க வேண்டும். இல்லையெனில் ஒரு பொட்டலம் வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தகவல் அளிப்பவா்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றாா்.
ஆய்வாளா் பேசுகையில், ஆலங்குளத்தின் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அவற்றை வியாபாரிகளே முன் வந்து அகற்ற வேண்டும். இல்லாவிடில் காவல்துறை மூலம் அகற்றப்படும் என்றாா்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றனா்.

