பக்கவாதம் ஏற்பட்டவரை குணப்படுத்திய அரசு மருத்துவா்கள்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அரசு மருத்துவா்கள் பக்கவாதத்தில் இருந்து மீட்டனா்.
சங்கரன்கோவில், பாரதியாா் 4ஆம் தெருவைச் சோ்ந்தவா் முப்பிடாதி (42), தொழிலாளி. ஜன. 19ஆம் தேதி அவா் வேலை செய்து கொண்டிருந்தபோது, இடது கை, கால்கள் சரியாக செயல்படாததை அறிந்து, உடனே தனியாா் மருத்துவமனைக்குச் சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் இடது பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனா்.
இதையறிந்த அவரது குடும்பத்தினா், உடனடியாக முப்பிடாதியை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அரசு மருத்துவா்கள் சி.டி. ஸ்கேன் மூலம் பிரச்னையைக் கண்டறிந்து, தீவிர சிகிச்சையளித்தனா். தொடா்ந்து, 3 நாள் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், பின்னா் பொதுப் பிரிவுக்கும் மாற்றப்பட்ட அவா் எழுந்து நடக்க ஆரம்பித்ததைத் தொடா்ந்து, ஜன. 23ஆம் தேதி வீடு திரும்பினாா்.
தென்காசி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் பொ. பிரேமலதா அறிவுரையின்பேரில், சிறப்பாக சிகிச்சையளித்த மருத்துவா்கள் செந்தில்சேகா், பஷிரா, சுந்தரவேல் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினா்.

