தனியார்மயமாகிறதா அரசு போக்குவரத்துக் கழகம்?

திருநெல்வேலி, ஜூன் 12: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயத்துக்குத் தயாராகும் வகையில், தென் மண்டலத்தில் உள்ள அரசு பஸ்களை பராமரிப்பதற்கு ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது.  தமிழக
Updated on
2 min read

திருநெல்வேலி, ஜூன் 12: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயத்துக்குத் தயாராகும் வகையில், தென் மண்டலத்தில் உள்ள அரசு பஸ்களை பராமரிப்பதற்கு ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 19,388 பஸ்கள் உள்ளன.

 இந்த பஸ்கள் ஒரு நாளைக்கு சுமார் 68.40 லட்சம் கிலோமீட்டர் தொலைவு இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 1.77 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். மாநிலத்தில் 92.14 சதவிகித மக்கள் அரசு பஸ்களிலேயே பயணிப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் தென்மாவட்டங்களில் மட்டும் 4,300 அரசு பஸ்கள் உள்ளன.

 ஒரு புதிய பஸ் இயக்கப்படும்போது அதற்கு ஆயுள் கணக்கீடாக, 7 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துக் கழகம் நிர்ணயிக்கிறது. ஆனால், பணியாளர் பற்றாக்குறை, தரம் குறைந்த உதிரிபாகங்கள் ஆகிய குறைபாடுகளால் அந்த பஸ் 7 ஆண்டுகள் முடிவதற்குள்ளே காலவதியாகிவிடுகிறது.

 போக்குவரத்துக் கழகத்தில் வெல்டர், பிட்டர், மெக்கானிக், கார்பென்டர், பிளாக்-ஸ்மித், லைனர், பெயின்டர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணியிடங்கள் 12 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், 7,500 காலிப் பணியிடங்கள் உள்ளன.

 ஒரு பஸ்ஸýக்கு டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்பப் பணியாளர் என இருக்க வேண்டிய விகிதம் தற்போது குறைவாக உள்ளது.

 இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் திடீரென ஓர் ஒப்பந்தபுள்ளியை வெளியிட்டுள்ளது.

 தென் மாவட்டங்களில் உள்ள 62 பணிமனைகளில் பஸ் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும்விதமாக ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும், பணிமனைகளில் நடத்தப்படும் கேண்டீன்களை நடத்துவதற்கும் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

 இந்த அறிவிப்பு விளம்பரம் சில பத்திரிகைகளில் வெளிவந்தது. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக, அத் துறையையே தனியாரிடம் அரசு ஒப்படைக்க முயலுவது வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.

 தென் மாவட்டங்களில் உள்ள பணிமனைகளில் தற்போது 2,800 தொழில்நுட்பப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 1,000 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

 இந்த காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கை தொழிலாளர்களை மட்டுமன்றி அரசு பஸ் சேவையையும் பாதிக்கும் என கூறுகின்றனர்.

 தனியாரிடம் "பாடி' கட்டப்பட்டு வரும் அரசு பஸ்கள் தரமற்றதாக இருப்பதாகப் புகார்கள் உள்ளன.

 அதோடு மட்டுமன்றி பணிமனைகளில் உள்ள கேண்டீன்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு ஒப்பந்தம் கோரி இருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 மோட்டார் வாகனச் சட்டப்படி, போக்குவரத்துக் கழகம்தான் கேண்டீனை நடத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அந்த விதிமுறையும் மீறப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

 பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பதால் அதன் பாதிப்பு தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி மறைமுகமாக பொதுமக்களுக்கும் இருக்கிறது.

 எனவே, பஸ்களின் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, காலியாக இருக்கும் தொழில்நுட்பப் பணியாளர்கள் பணியிடத்தை அரசு நிரப்ப வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை.

 கொள்கைரீதியான முடிவு

 இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி பொது மேலாளர் முருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

 தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து அரசு கொள்கைரீதியாக முடிவெடுத்துள்ளது. மதுரையில் இருந்துதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எங்களுக்கு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

 மேலும், பராமரிப்பை தனியாரிடம் கொடுப்பது தொடர்பாக அரசு பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், அதைப் பற்றி இப்போதைக்கு ஒன்று சொல்ல முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com