திருநெல்வேலி மாவட்டம், சேர்ந்தமரத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவிலை மீட்கக் கோரி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக விசுவ இந்து பரிஷத் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலர் பி.எம். நாகராஜன், திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
சேர்ந்தமரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சர்வேஸ்வரன் திருக்கோவில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இந்தக் கோவிலின் கருவறைக்கு முன் பகுதியில் அமைந்துள்ள கல்மண்டபத்தை ஆக்கிரமித்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டியுள்ளனர்.
கருவறையின் கல்மண்டபம் இன்றும் அப்படியே உள்ளது. இந்தக் கோவிலுக்கு சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து இந்த கோவிலை மீட்க விசுவ இந்து பரிஷத் நடவடிக்கை எடுத்து வருகிறது. இக் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனித் திருவிழாவை நடத்தவும், கோவிலை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்கவும் கோரி போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். சாதுக்கள், துறவிகள், சிவனடியார்களை அழைத்து இந்தப் பகுதியில் உள்ள 30 கிராம மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார் அவர்.
பேட்டியின்போது தமிழ்நாடு துறவிகள் பேரவை மாநில செயலர் சுவாமி ராகவானந்தா, விசுவ இந்து பரிஷத் மாவட்டச் செயலர் செல்லப்பாண்டியன், பா.ஜ.க. முன்னாள் மாவட்ட தலைவர் தீனதயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.