தேங்காய் சிரட்டை, மரக்கரியை மூலப்பொருளாகப் பயன்படுத்தி நடைபெறும் கார்பன் தொழிலால் இந்தியாவுக்கு அன்னிய செலாவணி அதிகரித்து வருகிறது என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள நோவா கார்பன்ஸ் நிறுவனத்தின் ஏ.ஆன்டனி தாமஸ் பேசியது:
தேங்காய் சிரட்டையை எரித்து அதிலிருந்து கிடைக்கும் கரியைப் பயன்படுத்தி ஆக்டிவேட்டட் கார்பன் என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது. குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், தங்கம் பிரித்தெடுத்தல், சிகரெட்கள், அழகுசாதன பொருள்கள், மருந்துகள் போன்றவற்றில் ஆக்டிவேட்டட் கார்பன் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் ரூ. 900 கோடிக்கு ஆக்டிவேட்டட் கார்பன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அன்னிய செலாவணி நம் நாட்டுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்டிவேட்டட் கார்பனில் 80 சதவீதம் தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது. கர்நாடகம், தமிழகத்தின் காங்கேயம் பகுதிகளிலிருந்து தேங்காய் சிரட்டை கரி மூலப்பொருளாக பெறப்படுகிறது. இதுதவிர பிலிப்பின்ஸ், மலேசியா, இலங்கை, தாய்லாந்து நாடுகளிலிருந்தும் தேங்காய் சிரட்டை கரி இறக்குமதி செய்யப்படுகிறது. தேங்காய் சிரட்டைகளை மொத்தமாக சேகரித்து அதன் மூலம் வருவாயைப் பெருக்க முடியும். இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு கிலோ 60 பைசாவாக இருந்த தேங்காய் சிரட்டை இப்போது கிலோ ரூ. 9-ஆக அதிகரித்துள்ளது. இதைக் கொள்முதல் செய்து, எரித்துக் கரியாக்கி, எங்களிடம் தேங்காய் சிரட்டை கரி கிலோ ரூ. 30-க்கு விற்கின்றனர். மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் தேங்காய் சிரட்டை கரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டால் லாபகரமாக சம்பாதிக்கலாம் என்றார் அவர். தொழில்முனைவோர், வர்த்தகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.